சென்னை: வெயில்காலம். வந்தால் சும்மா வருமா? கூடவே வியர்வை துர்நாற்றம், உடல் உஷ்ணப் பிரச்சினைகள், வியர்க்குரு, நீர்க்கடுப்பு, வெயிலில் காய்ந்து முகம் வறண்டு போதல் என பல பிரச்சனைகளை உடன் அழைத்துக் கொண்டு தான் வரும்.
இந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபடுவது? அதற்குத் தான் இருக்கவே இருக்கிறதே.. வெட்டி வேர். நமது பாரம்பரிய உஷ்ணத் தடுப்பான் என்று இதைச் சொல்லலாம்.
முன்பெல்லாம் வெட்டி வேரை நன்கு கழுவி காய வைத்து அதை மண்பானைத் தண்ணீரில் போட்டு வைப்பார்கள் வீட்டுப் பெரியவர்கள். வேரின் குளுமை நீரில் பரவி ஏற்கனவே ஜில்லிப்புடன் இருக்கும் மண் பானைத் தண்ணீர் வெட்டி வேர் வாசமும் சேர்ந்து தொண்டைக்கு இதமாக இருப்பதுடன் உடல் உஷ்ணத்தையும் கூட அப்படியே கரைத்துச் சென்று விடும்.
அது மட்டுமல்ல, வெட்டி வேரை நன்றாகக் காய்ச்சி வடித்த கரிசலாங்கண்ணி எண்ணெயுடன் சேர்த்து ஊற வைத்து பாட்டிலில் அடைத்து வைத்துப் பயன்படுத்துவார்கள். தினமும் இந்த எண்ணெயில் சில துளிகள் எடுத்து உச்சந்தலையில் வைத்து மென்மையாக மசாஜ் செய்து தலை வாரினால் வேர் வாசம் தலையில் இருக்கும் பொடுகு, பேன் தொல்லைகளைக் கூடத் தீர்த்து உச்சந்தலையின் உஷ்ணத்தையும் குறைக்கும்.
100 கிராம் வெட்டி வேருடன் 4 கப் தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி ஆற வைத்துக் குடித்து வந்தால் முகப்பரு, உடலில் ஏற்படும் உஷ்ணக் கொப்பளங்கள் முதலிய பிரச்சனைகள் தீரும்.
அது மட்டுமல்ல, தீக்காயத்தையும் கூட தீர்க்கவல்லது வெட்டி வேர் என்கிறார்கள். வெட்டி வேரை நன்கு அரைத்து அதை தீக்காயத்தில் பூசி வர நாளடைவில் காயம் விரைவில் குணமடைவதுடன் தழும்பு கூட வெகு விரைவில் மறைந்து விடும் என்கிறார்கள்.
ஆயுர்வேத மருத்துவ முறைப்படி வெட்டி வேர் கொண்டு தயாரிக்கப்படும் மருத்துவ எண்ணெயானது மனநோய் தீர்த்து மன அமைதிக்கு வழி வகுக்கும் என்கிறார்கள். வயதானவர்களுக்கு மூட்டு வலிப் பிரச்சனை இருக்குமில்லையா? அவர்கள் தேங்காய் எண்ணெயுடன் வெட்டி வேர் கலந்து காய்ச்சி அந்த எண்ணெயை காலில் வலி இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் நாளடைவில் வலி நீங்கி நிவாரணம் பெறலாம்.