சென்னை: அற்புதமான மருத்துவக்குணங்கள் நிரம்பியது தேன். இதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தின் அழகிற்கும் மிகவும் உதவுகிறது.
சருமத்தின் அழகு மற்றும் மென்மையைத் தக்க வைக்க உதவும் பொருட்களில் ஒன்று தான் தேன். தேனானது நிச்சயம் அனைத்து வீடுகளிலும் இருக்கும். இத்தகைய தேனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தின் பொலிவு அதிகரிப்பதுடன், சருமத்தில் உள்ள தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கிவிடும்.
அதிலும் கெமிக்கல் கலந்த அழகு சாதன பொருட்கள் உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தினால், அப்போது தேனைக் கொண்டு சருமத்தைப் பராமரிக்கலாம்.அதுவும் தேனை தனியாகவோ அல்லது முட்டை, எலுமிச்சை போன்ற பொருட்களுடன் சேர்த்தோ சருமத்தில் பயன்படுத்தலாம்.
இதனால் அந்த பொருட்களில் உள்ள சத்துக்களும் சருமத்திற்கு கிடைத்து, சருமம் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் தேனில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் இருப்பதால், அதற்கு முகப்பருவைப் போக்கும் சக்தியும் உள்ளது. அதுமட்டுமல்லாமல், தேனானது சருமத்தின் இளமை, மென்மை மற்றும் ஈரப்பதம் போன்றவற்றை தக்க வைக்கக்கூடியது.
சருமத்தில் படிந்துள்ள கருமை நிறத்தைதோ அல்லது பழுப்பு நிறத்தையோ போக்குவதற்கு, எலுமிச்சை துண்டை, தேனில் தொட்டு, நிறம் மாறி காணப்படும் இடத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இந்த முறையை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.