பொதுவாக, பெண்களின் பூப்படைதலை சமூகமாக கொண்டாடும் பழக்கங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் ஆண்கள் வாழ்வில் ஏற்படும் பூப்படைதல் மாற்றங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. அவர்கள் மனதில் ஏற்படும் குழப்பங்களும், உடலில் நிகழும் மாற்றங்களும் பெற்றோரால் புரிந்துகொள்ளப்படவில்லை என்றால், அது அவர்களை தனிமையாக்கும். இந்நிலையில், ஆண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் இந்த மாற்றங்களை நேர்மையாகவும், தெளிவாகவும் அறிந்து கொண்டு, தேவையான வழிகாட்டுதலையும், ஆதரவும் வழங்குவது மிகவும் அவசியமாகிறது.

அதிகமாக, 11 முதல் 14 வயதுக்குள் ஆண்களுக்கு பூப்படைதல் தொடங்கும். முதலில் தோள்பட்டைகள் விரிவாகி, தசைகள் வலிமை அடைகின்றன. குரல் மாற்றம் நிகழும், முகத்தில் எண்ணெய் சுரப்பி அதிகரித்து முகப்பரு தோன்றும். இந்த மாற்றங்கள் அனைவரிடமும் ஒரே மாதிரியாக இருக்காது. சிலருக்கு மார்பகத்தில் சிறிது வீக்கம் ஏற்படும், சிலருக்கு வியர்வை அதிகரிக்கும். இது இயற்கையான வளர்ச்சியின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும். தவிர, இந்த வயதில் தங்கள் உடலையும் தோற்றத்தையும் அவர்கள் அதிகமாக கவனிக்கத் தொடங்குகிறார்கள்.
பூப்படைதலின் மற்றொரு அறிகுறி, இரவில் விந்து வெளியேறுவது. இது அவர்களுக்கே குழப்பமாக இருக்கக்கூடும். பெற்றோர்கள் இதைப் பற்றிய தகவலை முன்கூட்டியே பகிர்ந்தால், குழந்தைக்கு இது சாதாரணம் என்பதை புரிந்துகொள்ளச் செய்யலாம். ஆண்குறி வளர்ச்சி, அந்தரங்க முடி வளர்ச்சி போன்ற மாற்றங்கள் ஒரு செயற்கையான நிகழ்வாகவே இருக்கின்றன. இந்த மாற்றங்களை உடலியல் விழிப்புணர்வுடன், பயமின்றி, நம்பிக்கையோடும் எடுத்துக்கொள்ளச் செய்ய வேண்டும்.
மிக முக்கியமாக, இந்த வயதில் மனநிலையும் மாற்றம் காணப்படும். அவர்கள் தனிமையை விரும்பலாம், குடும்பத்தோடு பழைய நெருக்கம் குறையலாம். வன்மம், கோபம், வெட்கம் போன்ற உணர்வுகள் அதிகமாக காணப்படும். இதுபோன்ற மனநிலை மாற்றங்களை பெற்றோர்கள் மென்மையாக அணுகி, அவர்களின் சுயமரியாதையை பாதிக்காமல், நெருக்கமான உறவை பராமரிக்க வேண்டும். அந்த பருவம் பிழையின்றி கடந்து செல்ல அவர்களின் பயணத்தில் வழிகாட்டியாக இருப்பதே பெற்றோரின் முதல் கடமையாகும்.