சமூக ஊடகங்களில் உடல்நல ஆலோசனைகள் சார்ந்த பல வீடியோக்கள் பரவி வருகின்றன. ஆனால் அவற்றை மக்கள் சிந்திக்காமல் பின்பற்றுவது, ஆரோக்கியத்தில் நன்மையைவிட பாதிப்பே அதிகமாக இருக்கக்கூடும். சமீபத்தில் வைரலான ஒரு வீடியோ, புதினா சட்னி உயர் இரத்த அழுத்தத்தை உடனடியாகக் குறைக்கும் என்று கூறியது. இதனால் பலரும் அதனை சிகிச்சை மாற்றாக ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கெதிராக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.

நவி மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் பிரதிக்ஷா கடம், புதினா ஒரு சத்தான மூலிகையாக இருந்தாலும், அதன் சட்னி வடிவம் இரத்த அழுத்தத்தை தாழ்த்தும் என்று நம்புவது தவறு என தெரிவித்துள்ளார். குறிப்பாக சட்னியில் உப்பு சேர்க்கப்படுவதால், அது எதிர்மாறாக இரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.
அதேபோல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்வரூப் ஸ்வராஜ் பாலும், இதுபோன்ற வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவது ஆபத்தானது எனக் கூறினார். உயர் இரத்த அழுத்தம் என்பது சீரான மருத்துவ மேலாண்மை தேவைப்படும் ஒரு தீவிர உடல்நல பிரச்சனை. ஒரு சட்னி மட்டும் அதன் மீது தாக்கம் ஏற்படுத்தும் என்றால், அது அபாயகரமான தவறான நம்பிக்கையாகும்.
இவற்றுடன் சேர்த்து சில உணவுப் பழக்கங்களை மேம்படுத்தினால், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். இலைக்களான கீரைகள், பழங்கள், விதைகள், பூண்டு, பீட்ரூட், முழுத்தானியங்கள் ஆகியவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும் குறைந்த கொழுப்புள்ள பால் வகைகளும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
சிறியதொரு உணவுப் பொருளின் மீது முழுமையாக நம்புவதால் சிக்கல்கள் ஏற்படலாம். அதைவிட, வாழ்க்கை முறை மாற்றங்கள், ஒழுங்கான உணவுப் பழக்கங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் மூலமாக மட்டுமே உயர்ந்த ரத்த அழுத்தத்தை குறைக்கும் நிலைத்த முடிவுகளைப் பெற முடியும். எனவே, இணையத்தில் பரவும் தகவல்களை வரவேற்கலாம், ஆனால் அதனைக் கையாண்டு சிந்தித்துப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.