சர்க்கரை நோய் என்பது பொதுவாக பெரியவர்களுக்கு ஏற்படும் மரபணு சார்ந்தவையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது மருத்துவ உலகில் புதிய அதிர்ச்சியாக, குழந்தைகளையும் தாக்கக்கூடிய ஒரு புதிய வகை சர்க்கரை நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாங்காக்கில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் “டைப் 5” என அழைக்கப்படும் இந்த வகை சர்க்கரை நோய் குறித்து அறிவிக்கப்பட்டது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் டைப் 1 சர்க்கரை நோய் பெரும்பாலும் பரம்பரை வழியாகவும், உடல் எதிர்ப்பு சக்தி குறைவாகவும் ஏற்படுகிறது. டைப் 2 வகை நோய் எனப்படும் மற்றொரு பிரிவு, தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியின் பற்றாக்குறை காரணமாக அதிகம் ஏற்படுகிறது. இந்த டைப் 2 வகை சர்க்கரை நோயால் இந்தியாவில் மட்டும் 23 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், டைப் 5 சர்க்கரை நோய் பற்றிய தகவல் மருத்துவர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இது குழந்தைகள் வரை பாதிக்கக்கூடிய வகையில் இருப்பதால், இது குறித்து பெற்றோர்களும், சமுதாயமும் விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொள்வது மிக அவசியமாகிறது.
மருத்துவர்கள் கூறுகையில், டைப் 5 சர்க்கரை நோய் பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படுகிறது. இதைத் தடுப்பதற்கான முக்கிய வழி சிறுவயதிலேயே ஊட்டச்சத்துடன் கூடிய உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குவதும், அவர்களின் வளர்ச்சிப் பருவத்தில் போதுமான சத்துக்களுடன் கூடிய சீரான உணவுமுறையை பின்பற்றச் செய்வதுமாகும்.
இதுமட்டுமல்லாமல், கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் சத்தான உணவுகளை உட்கொள்வது, குழந்தைகள் பிறந்தவுடன் தாய்ப்பாலுக்கு முன்னுரிமை வழங்குவது போன்றவை டைப் 5 சர்க்கரை நோயிலிருந்து பாதுகாப்பதற்கான முக்கிய முன்னெச்சரிக்கைகள் என குறிப்பிடப்படுகிறது.
இந்த புதிய கண்டுபிடிப்பால், சர்க்கரை நோய் தொடர்பான ஆராய்ச்சிகளும், தடுப்பு நடவடிக்கைகளும் புதியதொரு பாதையை நோக்கி நகர்த்தப்படுகின்றன. பொதுமக்கள் இந்த வகை புதிய நோயை புரிந்து கொண்டு, வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளும் அவசியம் இந்நிலையில் அதிகரித்துள்ளது.
புதிதாக உருவாகியுள்ள டைப் 5 சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது, எதிர்கால சந்ததிகளின் ஆரோக்கியத்திற்காக இன்றியமையாத ஒன்று என்றே மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.