சென்னை: நீச்சல் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்… சரியான பயிற்சி பெற்ற பின்னர் நீந்துவதால் உடலில் உள்ள கைகள், தோள்ப்பட்டைகள், முழங்கை, வயிறு, முள்ளந்தண்டைச் சுற்றியுள்ள தசைகள், வயிற்றிலுள்ள தசைகள் என எல்லா பாகங்களும் நன்றாக வேலை செய்கின்றன.
இதனால் உடலுக்கு சிறந்ததொரு கட்டமைப்பு உருவாகின்றது. மேலும் உடல் எடையை எப்பொழுதும் சீராக ஒரே நிலையில் பராமரிக்க கூடியதாக இருக்கும். அதுமட்டுமன்றி இதயம் மற்றும் நுரையீரல் போன்றன நன்றாக செயற்படுகின்றன. இதயத்திற்கு ஆரோக்கியம் கிடைக்கின்றது. அத்தோடு மன அழுத்தம் குறைகின்றது.
காற்றின் அடர்த்தியை விட நீரின் அடர்த்தி அதிகம் என்பதால் நீரில் நீந்த உடல் அதிகளவு சக்தியை விடுவிக்கிறது. குறிப்பாக அரை மணி நேரத்தில் இயல்பான அளவிலும் பார்க்க 370 கலோரி எரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்படுவதோடு, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதோடு இரத்தத்தில் உள்ள சீனியின் அளவும் கட்டுப்படுத்தப்படுகின்றது.
நீந்தும் போது மூட்டுக்கள் மற்றும் தசைகளுக்கு சிறந்ததொரு நெகிழ்வுத்தன்மை ஏற்படுகின்றது. இதனால் மூட்டுக்களின் ஆயுட்காலம் கூடுகின்றது. தினமும் இரவில் தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் மாத்திரைகளைப் பயன்படுத்தாமல் அதற்குப் பதிலாக ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் நீச்சல் அடித்தால் இரவில் நன்றாக உறக்கம் வரும்.
குறிப்பாக நீச்சல் வீரர்களைப் பார்க்கும் போது ஏனைய சாதாரண மனிதர்களை விட நினைவுத்திறன் அதிகளவில் காணப்படுவதாக ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் நீந்துவதை பொழுதுபோக்காக கொண்டவர்களுக்கு நேர்மறை எண்ணங்களோடு பொறுமை போன்ற பல நற்குணங்களும் சேர்ந்து வளர்கின்றன.