முதலில், கொழுப்பு கல்லீரல் நோய் மது அருந்துவதால் மட்டுமல்ல, கொழுப்பு நிறைந்த உணவுப் பழக்கமும் முக்கிய காரணமாக இருக்கிறது. கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும் நிலையில், அது லேயர் போல் பரந்து நோய் உருவாக்கும். உடற்பருமன் அதிகரிப்பு, நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால் குவிப்பு மற்றும் அதிக மதுபழக்கம் ஆகியவையும் இதற்கு பங்களிக்கும். சில நேரங்களில், தைராய்டு, சில மருந்துகள், பிசிஓடி போன்ற பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம்.

கல்லீரல் உடலில் உணவு மற்றும் கழிவுகளை சுத்தமாக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் வேலை பாதிக்கப்பட்டால், உடலில் நச்சுக்கள் குவிந்து பல்வேறு நோய்கள் உருவாகும். ஆரம்ப கட்டத்தில் கவனித்தால், மஞ்சள் காமாலை அல்லது கல்லீரல் செயலிழப்பு போன்ற கடுமையான பிரச்சனைகள் தவிர்க்கலாம். மருத்துவர் சொக்கலிங்கம் கூறியதாவது, கொழுப்பு கல்லீரல் நோய் குணப்படுத்தக்கூடியது என்பதே நம்பிக்கையளிக்கிறது.
நோயை சரி செய்ய முக்கியமானது வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கத்தை மாற்றுவதாகும். கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்த்து, உடல் எடையை சீராக பராமரித்து, தினசரி உடற்பயிற்சி செய்வது முக்கியம். இதை தொடர்ந்து சென்றால், 6 மாதம் முதல் 1 வருடத்தில் கல்லீரலில் படிந்திருக்கும் கொழுப்பு கரைந்து போகும். இது ஸ்டேஜ் 1, 2 அல்லது 3 நோயிலும் பொருந்தும், எனவே ஆரம்ப கட்டத்தில் கவனம் மிக அவசியம்.
ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை பெறாவிட்டால், கல்லீரல் செயலிழப்புக்கு வழி வகிக்கலாம். அப்போது ஹிப்பாட்டிக் டயாலிசிஸ், சில மருந்துகள் மற்றும் கடுமையான நிலை வந்தால் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை தேவைப்படும். எனவே, ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து, முறையான வாழ்க்கை முறை மற்றும் மருத்துவ பராமரிப்புடன் நோயை சரி செய்ய முடியும்.