தியானம் என்பது நம் மனதைக் கட்டுப்படுத்தும் ஒரு பயிற்சி என்று கருதப்படுகிறது. ஆனால் தியானம் செய்ய அமர்ந்த உடனே அமைதியான மனநிலை நிலவாது. பலரும் அந்த நேரத்தில் கடந்த நிகழ்வுகள், எதிர்காலத் திட்டங்கள், பேசிய உரையாடல்கள், வருத்தமான நினைவுகள் போன்றவை மனதில் தோன்றுவதை கவலைக்குரியதாக எடுத்துக்கொள்கிறார்கள். உண்மையில், இது தியானத்தின் ஒரு இயல்பான பகுதி. தியானம் செய்வது என்பது மனதின் இயல்பான அலைபாய்வை நிறுத்துவதே அல்ல; அதை கவனித்தல் தான்.

இந்திய தத்துவங்களில், மனது என்பது நிலைத்த ஒரு அமைப்பாக அல்ல, எப்போதும் அசைவில் இருக்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதன் முக்கிய பணிகள் நினைவூட்டல், ஆசை, ஒப்பீடு, முடிவெடுக்கும் செயல்கள் போன்றவையாகும். தியானம் செய்யும் போது இவை மறைந்து போவது இல்லை, ஆனால் அதைப் பார்த்துக்கொண்டு, அதை சமமாக அணுகுவதுதான் தியானத்தின் உண்மை பணி.
தியானத்தின் போது மனம் அலைபாய்வது சாதாரணம். மனதின் அலைகள், அதிர்வெண்களின் மாற்றத்தால் ஏற்படுகிறது. முதலில், அது பீட்டா நிலையில் இருந்து ஆல்ஃபா மற்றும் தீட்டா அலை நிலைக்கு மாற்றப்படுகிறது. இந்த மாற்றம் திடீரென்று நிகழாது, அது படிப்படியாகவே நிகழும். அதற்குள் மனம் பலதரப்பட்ட சிந்தனைகளில் ஈடுபடும். இதை தவறாகக் கொள்ளாமல், இயற்கையாக ஏற்க வேண்டும்.
மனதின் அலைபாய்வை நமக்கே தெரிய வரும் போது, அதற்குள் நம்மை விழிப்புணர்வுடன் வைத்துக்கொள்வது அவசியம். சுவாசம், எரியும் தீபம் அல்லது ஒரு மந்திரம் போன்ற ஒன்றில் கவனத்தை திருப்புவது பயனளிக்கும். மனம் சஞ்சலமானாலும், மீண்டும் மீண்டும் கவனப்புள்ளிக்கு திரும்புவது தியானத்தின் பயிற்சி ஆகும்.
தியானத்தின் போது தோன்றும் யோசனைகளோடு சண்டை போட வேண்டாம். மாறாக அவற்றை தூரத்திலிருந்து காணும் பார்வையாளர் போல இருங்கள். இது மனதின் இயல்பை புரிந்துகொள்ளும் ஒரு வழியாகும். தினமும் குறைந்தது 10 நிமிடங்கள் தியானம் செய்வது போதுமானது. பழக்கமாகும் போது அது வாழ்க்கையின் ஓர் பகுதியாகிவிடும்.
தியானம் முடிந்த பிறகு, சிறிது நேரம் அமைதியாக அமருங்கள் அல்லது உங்கள் அனுபவங்களை டைரியில் எழுதுங்கள். மனத்தில் எழும் யோசனைகள் உணர்வுகளுடன் கூடியவை. அவற்றை மதிப்புடன் அணுகுவதும், பயப்படாமலும் இருப்பதும் முக்கியம். தியானத்தின் போது மனம் அலைபாய்வது என்பது தவறல்ல; அது தியானத்தின் பயணத்திலுள்ள ஒரு படியாக மட்டுமே.