வைட்டமின் டி-யின் சிறந்த இயற்கை ஆதாரம் சூரிய ஒளி என்பதைக் குறித்து நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் கோடைக்கால வெயிலில் தவறான நேரத்தில் வெளியில் செல்வது நன்மை அளிக்காமல், உடலுக்கு தீங்கு விளைவிக்கும். வைட்டமின் டி நம் உடலுக்கு தேவையான கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்தி எலும்புகளை வலுப்படுத்துகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் மனச்சோர்வு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

நமது உடலுக்கு தினசரி தேவைப்படும் முக்கிய ஊட்டச்சத்தாக வைட்டமின் டி உள்ளது. இதற்காக சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவது அல்லது தவறான நேரத்தில் வெளிப்படுவது சருமத்திற்குத் தீங்கு விளைவிக்கும். எனவே, கோடைக்காலத்தில் வைட்டமின் டி-யை பாதுகாப்பாக பெற சரியான நேரத்தை தேர்வு செய்வது அவசியம்.
கோடைக்காலத்தில் வைட்டமின் டி-யை பெற சிறந்த நேரம் காலை 8 மணி முதல் 10 மணி வரை ஆகும். இந்த நேரத்தில் வைட்டமின் டி உற்பத்திக்கு காரணமான UVB கதிர்கள் போதுமான அளவில் இருக்கும். மேலும், வெயில் கடுமையாக இருக்காது. இதனால் சன்பர்ன் மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் குறையும்.
சரும நிறத்தின்படி வெயிலில் செலவிடும் நேரம் வேறுபடும். லேசான சருமம் கொண்டவர்களுக்கு 15-30 நிமிடங்களும், டார்க்கான சருமம் கொண்டவர்களுக்கு 30-45 நிமிடங்களும் போதுமானவை.
தொழில்நுட்ப ரீதியாக UVB கதிர்கள் அதிகமாக இருக்கும் நேரம் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. ஆனால், கோடையில் இந்த நேரத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால், டிஹைட்ரேஷன், சன்பர்ன் மற்றும் தோல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த நேரத்தில் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
வெயில் உச்சத்தில் இருக்கும் போது UVB கதிர்கள் அதிகமாக இருப்பதால் வைட்டமின் டி உற்பத்தி அதிகமாகும் என்றாலும், இந்த நேரத்தில் வெயிலில் செல்வது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், காலை 8 முதல் 10 மணிக்குள் அல்லது மாலை 4 மணிக்குப் பிறகு வெயிலில் செல்வது பாதுகாப்பானது.
சூரிய ஒளியில் செல்கையில் உங்கள் கைகள், கால்கள் மற்றும் முகம் வெளிப்படும் வகையில் உடை அணிந்து செல்லுங்கள். சன்ஸ்கிரீன் க்ரீம் பயன்படுத்துவது UVB கதிர்களை தடுக்கலாம். எனவே, வைட்டமின் டி-யை பெறுவதற்காக சன்ஸ்கிரீனை பயன்படுத்துவதற்கு முன்பு 10-15 நிமிடங்கள் வெயிலில் செலவிடுங்கள்.
வைட்டமின் டி-யை அதிகரிக்க வெயிலில் செல்லும் நேரத்தில் நடைப்பயிற்சி, யோகா அல்லது லேசான உடற்பயிற்சி செய்வது நல்லது. இது UVB உறிஞ்சுதலையும் உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
எனவே, கோடையில் வைட்டமின் டி-யை பெறுவதற்காக பாதுகாப்பாக இருக்க வேண்டும். சரியான நேரத்தில் வெயிலில் செல்வதுடன், உடலின் நீர் சமநிலையையும் பேணுதல் அவசியம்.