வெற்றிலை பழங்காலத்திலிருந்தே மருத்துவ குணங்களால் சிறப்பானது. சளி, காய்ச்சல் போன்ற பொதுவான உடல் குறைபாடுகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்கக் கூடிய இது, வீட்டில் வளர்த்தால் அன்றாட சிக்கல்களுக்கு இயற்கை தீர்வாக அமையும். இத்தகைய பல்வகை நன்மைகள் உள்ள இந்த இலையை வீட்டிலேயே எளிதாக வளர்த்தால் எப்படி என்பதைக் கீழே பார்ப்போம்.

முதலில் நாற்றங்கால்களில் இருந்து ஆரோக்கியமான வெற்றிலை கொடியை தேர்ந்தெடுங்கள். அதில் குறைந்தபட்சம் இரண்டு முனைகள் மற்றும் இலைகள் இருக்க வேண்டும். பின்னர், அந்தக் கொடியை சுத்தமான தண்ணீரில் கழுவி, ஒரு பாட்டிலில் தண்ணீரை ஊற்றி, கொடியின் முனைகளை மூழ்கவைத்து நிழலான இடத்தில் வைக்க வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீரை மாற்றி வைக்க, ஐந்து நாட்களில் வேர்கள் வளரத் தொடங்கும். இந்த வேர்கள் நன்றாக வளர்வது வரை நீரில் வைத்தே பராமரிக்க வேண்டும்.
வெற்றிலையின் வேர்கள் வளர்ந்தவுடன், அவற்றை மண்ணில் நடவதற்குப் பொருத்தமான நேரம் வந்து விடும். 60% சிவப்பு மண், 20% மணல் மற்றும் 20% கால்நடை உரம் அல்லது மண்புழு உரம் கலந்த மண் சிறந்தது. தொட்டியின் நடுவில் அல்லாமல் விளிம்பில் கொடியை நட்டு, வேரிலிருக்கும் கீழ் இலைகளை அகற்றி வளர்ப்பு தொடங்கலாம். இதற்கு சூரிய ஒளி நேரடியாக மிதமான அளவில் கிடைக்கும் இடம் சிறந்தது.
வெற்றிலை வளர்க்க ஈரமான நிலம் அவசியம். எனவே காலை மற்றும் மாலை என தினமும் இருமுறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பானையில் தண்ணீர் தேங்காமல் இருக்கப் பார்த்து, வடிகால் அமைப்பு நன்கு இருக்க வேண்டும். மேலும், ஒரு மெல்லிய குச்சியை ஆதரவாக கொடுக்கும்போது, வெற்றிலை நன்கு உயர வளரக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த முறைகளை சரியாகப் பின்பற்றினால், உங்கள் வீட்டில் வெற்றிலை நன்கு வளரும்.