சமீபத்தில் உலக கல்லீரல் தினத்தன்று டெல்லியில் கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவனம் (ILBS) நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது தனிப்பட்ட உடற்பயிற்சி மற்றும் எடை குறைப்பு முயற்சி குறித்து பேசினார். அவர், இந்தியாவில் உள்ள இளைஞர்கள் தங்கள் உடல்நல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
அமித்ஷா தனது ஹெல்த் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் கதையை பகிர்ந்தபோது, எளிமையான வாழ்க்கை முறை மாற்றங்கள் தான் தனது முயற்சிக்கு வெற்றி பெற்றதற்கான காரணம் என கூறினார். அவை, தினசரி சிறந்த தூக்கம், ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், சுத்தமான தண்ணீர் குடிப்பது மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது போன்ற முக்கிய அம்சங்களை உள்ளடக்கியது.
அமித்ஷா கூறும்போது, “சரியான தூக்கம், சுத்தமான தண்ணீர், சத்தான உணவு மற்றும் சீரான உடற்பயிற்சி ஆகியவை என் வாழ்க்கை மற்றும் உடல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் நான் அனைத்து அலோபதி மருந்துகளையும் நிறுத்திவிட்டேன்,” என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இது, அவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது மட்டுமல்ல, அவரின் வேலை செய்யும் திறன், விமர்சன ரீதியாக சிந்திக்கும் திறன் மற்றும் முடிவுகளை எடுக்கும் திறன் ஆகியவையும் மேம்பட்டுள்ளதாக அவர் கூறினார். “ஒவ்வொருவரும் தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க நான் வலியுறுத்துகிறேன். உங்கள் உடல் சிறப்பாக இருக்க தினசரி 2 மணிநேர உடற்பயிற்சியையும், உங்கள் மன ஆரோக்கியம் நன்றாக இருக்க 6 மணிநேரத்தை தூங்கவும் அர்ப்பணியுங்கள். இது எனது தனிப்பட்ட அனுபவம், இது பல நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது,” என அவர் கூறினார்.
அமித்ஷா உடற்பயிற்சி மற்றும் போதுமான ஓய்வு மூலம் ஆரோக்கியமான வழக்கங்களை பின்பற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி, இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அவர் மேலும், பெருநிறுவனங்கள் கல்லீரல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, கல்லீரல் சிகிச்சை மற்றும் பராமரிப்பில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சி நிறுவனங்களை ஆதரிக்க வேண்டும் என்று கூறினார்.
அமித்ஷா தனது ஆரோக்கிய பழக்கங்களை பகிர்ந்து கொண்டுள்ளதன் மூலம், மற்றவர்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்ற ஊக்குவிக்கின்றார்.