பாரம்பரிய தென்னிந்தியாவின் இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி போன்ற காலை உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கின்றன என்று எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி கூறியுள்ளார். “பாரம்பரிய தென்னிந்திய காலை உணவு குடல் பாக்டீரியாவுக்கான எரிபொருள்” என அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து அதற்கு ஆதாரங்களையும் பகிர்ந்துள்ளார்.

அவர் குடலுக்கு உகந்த எட்டு வகையான காலை உணவுகளை பரிந்துரைத்துள்ளார். அதில் கிரேக்க யோகர்ட், பெர்ரி, சியா விதைகள் சேர்த்து சாப்பிடுவது நுண்ணுயிர் சமநிலையை மேம்படுத்தி வீக்கத்தைக் குறைக்கும். ஓட்ஸ், ஆளிவிதை, பச்சை வாழைப்பழம் ஆகியவை நார்ச்சத்து மற்றும் ப்ரீபயாடிக்குகளை வழங்கி செரிமானத்தை எளிதாக்கும். சைவ ஆம்லெட் மற்றும் பல தானிய டோஸ்ட் வயிறு நிறைந்த உணர்ச்சியையும் நிலையான ஆற்றலையும் தரும்.
மிக முக்கியமாக, இட்லி சாம்பார் மற்றும் தேங்காய் சட்னி போன்ற புளித்த உணவுகள் குடலுக்கு நல்ல பாக்டீரியாக்களைத் தூண்டி நார்ச்சத்தையும் தாவர புரதத்தையும் வழங்குகின்றன. மேலும், பல தானிய அவகேடோ டோஸ்ட், காய்கறிகள் மற்றும் வேர்க்கடலையுடன் அவல் போன்றவை குடல் நுண்ணுயிர் பன்முகத்தன்மையை அதிகரிக்க உதவும்.
இறுதியாக, சிறந்த குடல் ஆரோக்கியத்திற்கு உங்கள் காலை உணவில் புரதம், புரோபயாடிக்குகள், ப்ரீபயாடிக்குகள் மற்றும் பாலிபினால்கள் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என டாக்டர் சௌரப் சேத்தி வலியுறுத்துகிறார்.