சென்னை: உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் துத்திக்கீரையில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
நாம் உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம், புளிப்பு, நார்ச்சத்தற்ற மாவுப் பதார்த்தங்கள் ஜீரணத்தில் சிக்கலை ஏற்படுத்தி வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது.
பெருங்குடலில் அதிகம் வாதம் உண்டாகிறது. குடலில் வாதமும், கழிவுகளும் தங்குவதால் மூலத்தில் சூடு ஏற்பட்டு புண்கள் உண்டாகின்றன. துத்தி இலை குடல் புண்களை ஆற்றி, மலத்தை இளக்கி வெளியேற்ற உதவுகிறது. துத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடலாம்.
துத்தி இலையை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி மூலத்தில் கட்ட, மூலத்தில் உள்ள வீக்கம், வலி, குத்தல் மற்றும் எரிச்சல் நீங்கும். ஆசனவாயில் கடுப்பு மற்றும் எரிச்சலுடன் கூடிய வலி இருக்கும் சமயம் துத்திக் கீரை ஒரு கைபிடி எடுத்து அதை 100 மி.லி.
நீரில் கொதிக்க வைத்துச் சிறிது பால், பனங்கற்கண்டு கலந்து பருக வலி குறையும்.
துத்தி இலையை நீரில் கொதிக்க வைத்து வாய் கொப்புளிக்க, பல் ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும். அதிகச் சூட்டினால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல், உடலில் உண்டாகும் கட்டிகளுக்கு துத்தி இலை ஒரு கைபிடி எடுத்து 100 மி.லி. நீரில் கொதிக்கவைத்துப் பருகலாம்.