உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மாரடைப்பு மரணங்கள் மருத்துவ உலகையே பதற்றத்தில் ஆழ்த்தி வருகின்றன. குறிப்பாக அதிகாலை நேரங்களில் மாரடைப்பு அதிகம் ஏற்படுவதால், அதன் அறிகுறிகள் இரவு நேரத்திலேயே தொடங்குகின்றன என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக மக்கள் நெஞ்சு வலியை மட்டுமே மாரடைப்புடன் இணைத்து பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில், உடலின் பல்வேறு பகுதிகளில் வேறுவிதமான அறிகுறிகளாக இது வெளிப்படக்கூடும்.

சாதாரண வேலை சோர்வுக்கு மாறாக, காரணமின்றி இரவு நேரங்களில் உடல் மிகுந்த சோர்வை உணர்வது, இதய நோயின் ஆரம்ப எச்சரிக்கையாகும். பெண்களிடம் இது அதிகமாகக் காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. தூங்கும் முன் உடல் இயல்பில்லாமல் சோர்வாக இருந்தால், அதை அவமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியம்.
இரவு தூக்க நேரத்தில் திடீரென இதயம் வேகமாக அல்லது ஒழுங்கற்ற முறையில் துடிப்பதும் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை. மன அழுத்தம், பயம் போன்ற காரணங்களால் இதயம் வேகமாக துடிக்கலாம். ஆனால் காரணமின்றி அடிக்கடி இவ்வாறு நடந்தால், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் சிக்கல் இருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
மாரடைப்பு நெஞ்சு வலியால் மட்டுமல்ல, இடது கை, தோள், கழுத்து, முதுகு போன்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். சில நேரங்களில் தாடை வலியும் இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். பலர் இதை பல் பிரச்சனை என்று தவறாக கருதுவார்கள். ஆனால் நெஞ்சு வலி, வாந்தி, உடல் சோர்வு ஆகியவற்றுடன் தாடை வலியும் சேர்ந்தால், அது கடுமையான எச்சரிக்கையாகும்.
எனவே, இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக அருகிலுள்ள மருத்துவரை தொடர்பு கொண்டு சிகிச்சை பெறுவது அவசியம். தாமதம் செய்தால் அது உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.