சென்னை: முதுகுவலி என்பது ஒரு வாழ்வியல் நோயாகிவிட்டது. முப்பதைக் கடந்த பலரும் முதுகுவலியால் அவதிப்படுக்கிறார்கள். இதற்குப் பல்வேறு காரணிகள் இருக்கின்றன. 60 சதவீத மக்கள் தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒரு வகையில் முதுகு வலியால் அவதிப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இது தற்போது வளர்ந்து வரும் பெரிய சுகாதார பிரச்னையாக உருவெடுத்து உள்ளது. காயம் அல்லது அதிர்ச்சி, உடல் பருமன், அசாதாரண முறையில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது, நீண்ட நேர பயணம், மன அழுத்தம், வேலையில் அதிருப்தி அல்லது கடுமையான உடற்பயிற்சி மற்றும் சமூக பொருளாதார நிலை ஆகிய காரணங்களால் முதுகுவலி ஏற்படுகிறது.
முதுகுவலி என்பது ஒரு நோய் அல்ல. ஆனால், அது உடலில் ஏற்படும் அறிகுறிகளின் தொகுப்பாகும்.வட்டு இறக்கம், நரம்பு வேர் சுருக்கம், முதுகெலும்பு உறுதியற்ற தன்மை, முதுகெலும்பு முறிவு, எலும்புச் சிதைவு,கீல்வாதம், அரிதான தொற்றுகள் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றின் காரணமாக முதுகின் கீழ்ப் பகுதியில் வலி ஏற்படுகிறது. சிலருக்கு கடுமையான முதுகுவலி இருக்கும்.
சிலருக்கு வெறும் காலுடன் நடக்கும்போது சுருக்கென்று குத்துவது போன்ற உணர்வு ஏற்படும். நீண்ட நாட்களாகப் படுக்கையில் இருப்பவர்களுக்கும் முதுகுவலி ஏற்படும். முதுகுவலி ஏற்பட்டு விட்டாலே அறுவை சிகிச்சைதான் தீர்வு என்று சிலர் கருதுகிறார்கள். மேலே சொன்ன முதுகுவலிகளுக்கு எல்லாம் அறுவைசிகிச்சை தேவையில்லை. முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு, சரியான வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றோடு முதுகுத் தண்டை வலுப்படுத்துவதற்காக இரண்டு மாதங்கள் பிசியோதெரபி எடுத்துக்கொண்டு சில வாரங்கள் ஓய்வில் இருந்தாலே முதுகுவலி பறந்துவிடும்.
இரண்டு வார காலத்துக்கு இந்த சிகிச்சையை மேற்கொண்டு தொடர்ச்சியான வலி குறைந்த பிறகு, முதுகுவலியின் காரணத்தைக் கண்டறிய முழுமையான மருத்துவ நரம்பியல் பரிசோதனை செய்யலாம். முதுகெலும்பின் நிலை, மூட்டுகளின் கீல்வாதத்தை மதிப்பீடு செய்ய முன்னோக்கி வளைத்தல் மற்றும் பின்னோக்கி வளைத்தல், எலும்பின் தரம், எலும்பு முறிவு, ஏதேனும் கட்டிகள் இருந்தால் அவற்றை கண்டறிய எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
நம் நாட்டில் பொறுத்தவரை எக்ஸ்ரே எடுப்பதற்கான கட்டணம் என்பது மிகவும் குறைவாகும். எக்ஸ்ரேயில் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே வட்டு, நரம்பு மற்றும் மென்மையான திசுக்களை மதிப்பீடு செய்ய எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யலாம். வலி ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய எம்ஆர்ஐ ஸ்கேன் நமக்கு உதவுகிறது. சிலருக்கு, அடிவயிற்றுத் தசைகள், முதுகுத் தசைகள் மற்றும் கால்களின் தசைகளில் வலிமை இல்லாத காரணத்தாலும் முதுகு வலி ஏற்படுகிறது. எனவே, வலி மேலும் அதிகரிக்காமல் தடுக்க வேண்டுமானால், காயமடைந்த உடல் பாகங்களையும் தசைகளையும் வலுப்படுத்தி குணமாக்க வேண்டும்.