தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பூத் அளவிலும் தண்ணீர், மோர் பந்தல் அமைக்க பாஜகவினருக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:- இயற்கை பேரிடர் மற்றும் பிரச்சனைகளின் போது மக்களுக்கு உறுதுணையாக நின்று அவர்களின் துயரங்களை போக்க, மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் முன்னின்று செயல்படுவது தமிழக பாஜக சகோதர, சகோதரிகளின் இயல்பு.

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் தாங்களாகவே முன்வந்து தண்ணீர் பந்தல், மோர் பந்தல் அமைத்து மக்களின் தாகத்தை தணித்து வருகின்றனர். இந்த ஆண்டும் கோடை காலம் துவங்கியுள்ளது. வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, தமிழக பாஜக சகோதர, சகோதரிகள் மீண்டும் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் உன்னத பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது.
தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், குறிப்பாக மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிறுத்தங்கள், பள்ளிகள், சந்தைகள் போன்ற இடங்களுக்கு அருகிலும் முடிந்தவரை தண்ணீர் பந்தல், மோர் பந்தல் அமைக்க வேண்டும். அவற்றை கோடை முழுவதும் பராமரித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.