புதுச்சேரி: நடிகர் விஜய் கட்சியின் தவெகவின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டு பணியில் புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் ஈடுபட்டார். நேற்று மாலை மாநாட்டுப் பணி முடிந்து வீடு திரும்பியபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவருக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து தவெக நிர்வாகிகள் புதுச்சேரி சித்தன்குடிக்கு வந்திருந்தனர். சரவணன் மறைவு குறித்து கேள்விப்பட்டதும், மாநாட்டு பணியில் இருந்த பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், சரவணன் வீட்டிற்கு வந்து சரவணன் உடலை பார்த்து கதறி அழுதார்.
இந்நிலையில் நேற்று தவெக தலைவர் விஜய், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சரவணன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். சரவணனின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது. சரவணன் மறைவையொட்டி, அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
என்னோடும் நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் புதுவை மாநில நிர்வாகியும் கட்சி, அமைப்பிற்காக அயராது உழைத்த புதுச்சேரி சரவணன் திடீர் உடல் நலக்குறைவு எங்களுக்கு அதிர்ச்சியையும் பெரும் மனவேதனையையும் அளித்துள்ளது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.