சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தவும், முக்கிய முடிவுகள் குறித்து தெரிவிக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்னை வந்தார். டெல்லியில் இருந்து புறப்பட்டு இரவு 11.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த அவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், நைனார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமித்ஷா ஓய்வெடுத்தார். தமிழகத்தில் கட்சி நிலவரம் குறித்து மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நேற்று காலை அமித்ஷா ஆலோசனை நடத்தினார். பின்னர், மயிலாப்பூரில் உள்ள ‘துக்ளக்’ ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்குச் சென்றார். அங்கு இருவரும் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வலுவான கூட்டணி அமைப்பது, பாஜகவின் தேர்தல் வியூகம், அதிமுகவுடன் கூட்டணி என இருவரும் தீவிரமாக விவாதித்தனர். அ.தி.மு.க.,வில் நிலவும் கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு, கட்சியை ஒற்றுமைப்படுத்தி, பலப்படுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும் என, குருமூர்த்தி கூறியதாக கூறப்படுகிறது. மேலும் மாநிலத்தில் திமுகவின் ஊழல், மோசடி, சட்டம் ஒழுங்கு போன்றவற்றை முன்னிலைப்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்தும் ஆலோசித்தனர்.
பின்னர், அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் குருமூர்த்தி வீட்டில் தொலைபேசியில் பேசியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து கிண்டியில் உள்ள நட்சத்திரா ஓட்டலில் அமித் ஷாவை சந்தித்து கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார் பழனிசாமி. குறிப்பாக, அ.தி.மு.க., தலைமையில் தேர்தலில் போட்டியிடுவது, கூட்டணி ஆட்சி அமைப்பது, குறைந்தபட்ச செயல்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். இதையடுத்து அதிமுக தலைமையில் பாஜக-அதிமுக கூட்டணி அமைக்கப்படும் என அமித்ஷா பங்கேற்றோர் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
பா.ஜ.க., – அ.தி.மு.க., தலைவர்கள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளனர். 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தலைமையில் போட்டியிடுவோம். தமிழகத்தில் பா.ஜ.க., – அ.தி.மு.க., கூட்டணி ஆட்சி அமைக்கும். பின்னர், அமித் ஷா, பழனிசாமியின் அழைப்பை ஏற்று, அவரது வீட்டில் நடந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டார். அண்ணாமலை, எல்.முருகன், நைனார் நாகேந்திரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். அங்கு ஒரு மணி நேரம் பழனிசாமி மற்றும் அமித்ஷா ஆலோசனை நடத்தினர். அமித்ஷா நேற்று இரவு டெல்லி சென்றார்.