சென்னை: சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டு நூறாவது ஆண்டை முன்னிட்டு நேற்று சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஏராளமான கல்லூரி மாணவர்கள் வந்திருந்தனர். இந்நிலையில், நிகழ்ச்சி தொடங்கும் முன் மாணவிகள் அணிந்திருந்த கருப்பு துப்பட்டாக்களை கழற்றுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மாணவர்கள் தாங்கள் அணிந்திருந்த கறுப்பு துப்பட்டாக்களை கழற்றி விட்டு வெளியில் வைத்துவிட்டு கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், ‘தி.மு.க., பயந்து விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமடைந்து நம்பிக்கை இழந்துள்ளனர்.
இது என்ன எதேச்சதிகாரம்?’ என்று கண்டனம் தெரிவித்தார். இதேபோல் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.