சென்னை: இந்தியாவின் கொள்கை மற்றும் பொருளாதார ஆராய்ச்சி குறித்து அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைகழகத்தில் மாணவர்களுடன் பா.ஜ.க., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துரையாடினார். தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு, புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில தலைவர் மாற்றத்திற்கு பிறகு அண்ணாமலை பல்வேறு பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக கடந்த 14-ம் தேதி அண்ணாமலை ஆன்மிக பயணமாக இமயமலை சென்றார். இமயமலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ மகாவதார் பாபாஜியின் குகையில் தியானம் செய்தார். 3 நாள் ஆன்மிக பயணத்திற்கு பிறகு சென்னை திரும்பினார். பின்னர், கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, கடந்த 23-ம் தேதி அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில், கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ‘ஸ்டான்போர்ட் இந்தியா மாநாடு 2025’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றார்.

அதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள டெஸ்லா மோட்டார்ஸின் உயர் அதிகாரிகளுடன் அவர் ஒரு முக்கிய கலந்துரையாடலை நடத்தினார். இந்நிலையில் நேற்று அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் இந்திய கொள்கை மற்றும் பொருளாதார ஆராய்ச்சி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் கொள்கை மாற்றங்கள் குறித்து மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அண்ணாமலை விரிவாக பதிலளித்தார்.