கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை, 2020-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர்ந்தார். அதன்பிறகு, 2021 ஜூலையில் அண்ணாமலைக்கு பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு, பல்வேறு அரசியல் போக்குகள் குறித்த அவரது அறிக்கைகள் மற்றும் பேச்சுகள் அரசியல் வட்டாரங்களில் விவாதங்களைத் தூண்டின. இந்நிலையில் தற்போது பாஜக உள்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.
பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். உறுப்பினர் சேர்க்கை 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். மேலும், புதிய உறுப்பினர் சேர்க்கையும் ஏற்றுக்கொள்ளப்படும். அதன்படி, செப்டம்பர் மாதம் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. அதைத் தொடர்ந்து உள்கட்சித் தேர்தலும் தொடங்கியது. இதில் கிளைத் தலைவர்கள், மண்டலத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் என பல்வேறு பதவிகளுக்கு ஓட்டெடுப்பு அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்தப் பதவிக்கு நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை தேர்வு செய்யப்படுவார் என்று பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதுகுறித்து மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-
மாவட்ட தலைவர்களுக்கான தேர்தல் இல்லாமல், ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாநில தலைவர் பதவிக்கு மட்டும் எப்படி தேர்தல் நடக்கும். மாநில தலைவராக அண்ணாமலை மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார். பாஜக மேலிடமும் அதையே விரும்புகிறது. ஜனவரி 26 அல்லது 28-ம் தேதி பாஜக தேசியத் தலைமை பல்வேறு மாநிலங்களின் மாநிலத் தலைவர்களின் முதல் பட்டியலை வெளியிடும்.
அதில் தமிழகமும் இடம்பெற வாய்ப்பு உள்ளது. அதில் மீண்டும் அண்ணாமலையை நியமித்து அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது. வானதி, தமிழிசை உள்ளிட்டோர் மாநிலத் தலைவரானால் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கும் என அதிமுகவினர் தெரிவித்துள்ளனர். ஆனால், அண்ணாமலைக்கு தேசிய தலைமை ஆதரவு அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.