சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு அறிக்கையை வெளியிடுங்கள்… 2024-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு, விரைவாக தேர்வை நடத்தி முடிக்க தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 2024-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், தேர்வு நடத்துவதற்கான ஜூலை மாதம் முடிவடைந்து, ஆகஸ்ட் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், தேர்வுக்கான அறிவிப்புக் கூட இன்னும் வெளியிடப்படாதது கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசின் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் படிப்பு படித்து முடிக்கும் மாணவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணியில் உடனடியாக சேர வேண்டும் என்பதற்காகவே இந்த விதி கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டில் இந்த விதியை அரசு மதிப்பதே இல்லை; தகுதித் தேர்வும் நடத்தப்படுவதில்லை. எனவே உடன் இந்த தகுதி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.