திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் சார்பில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அவர் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூத்த தலைவர் சத்யன் மோகேரியும், பா.ஜ.க., சார்பில் நவ்யா ஹரிதாசும் போட்டியிடுகின்றனர். வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை துவக்கியுள்ள பா.ஜ.க., வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் கூறியதாவது:- வயநாடு தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன். இதில் காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பத்தின் மீதான எதிர்ப்பு, உள்ளூர் அரசியல்வாதியாக நான் செய்து வரும் பணி, பிரதமர் மோடி மீதான நல்லெண்ணம் என 3 சாதகமான அம்சங்கள் உள்ளன.
கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பிரியங்கா காந்திக்கு இது தெரிந்திருப்பது உண்மைதான். ஆனால் அவருக்கு தேர்தல் அனுபவம் இல்லை. வயநாடு தொகுதி மக்களின் நம்பிக்கையை நேரு குடும்பமும், காங்கிரஸ் கட்சியும் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இதன் மூலம் அப்பகுதி மக்களை ஏமாற்றியுள்ளனர்.
வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டபோது நேரு குடும்பத்தினர் தங்களுக்கு உதவவில்லை என்பதை உணர்ந்தனர். இதனால் பா.ஜ.க.வின் வெற்றி உறுதியாகியுள்ளது. பிரதமர் மோடி வயநாடு தொகுதி மக்களின் மனதை வென்றுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரளாவில் முதன்முறையாக திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெற்றதே இதற்கு சாட்சி. அந்த வகையில் வயநாடு தொகுதியில் 2-வது வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.