சென்னை: தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து செய்யப்பட்டாலும் பா.ஜ.க. எந்த தடையும் இல்லாமல் நிதியை குவித்து வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை:
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியான தகவலின்படி, பா.ஜ.க. நேரடியாக ரூ.2 ஆயிரத்து 244 கோடி நன்கொடையை 2023-24-ம் ஆண்டு பெற்றிருக்கிறது. கடந்த 2022-23-ல் தேர்தல் பத்திர நன்கொடை மூலம் பெற்றதைவிட 212 சதவீதம் அதிகமான நிதியை பா.ஜ.க. பெற்றிருக்கிறது. தேர்தல் பத்திர நன்கொடை திட்டம் சுப்ரீம் கோர்ட்டால் ரத்து செய்யப்பட்டு இருந்தாலும் வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறையை பயன்படுத்தி தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பெருமளவில் நிதியை நேரடியாக பெற்றிருப்பதை இந்த தகவல் உறுதிப்படுத்துகிறது.
பா.ஜ.க.வின் ஊழல் ஒன்றன்பின் ஒன்றாக அம்பலமாகி உள்ளது. சுப்ரீம் கோர்ட் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை ரத்து செய்திருந்தாலும் பா.ஜ.க. நிதி பெறுவதற்கு எந்த தடையும் இல்லாமல் நிதிகளை குவித்து வருகிறது. இந்த நிலை தொடர்வது இந்தியாவின் ஜனநாயகத்திற்கே பெரும் ஆபத்தாக முடியும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.