சென்னை: பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா வரும் 12ம் தேதி மதுரை வருகை புரிய இருந்தார். இந்நிலையில் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வருகிற 12-ந்தேதி மதுரையில் இருந்து பிரசார பயணத்தை தொடங்குவதாக இருந்தது. இந்த பிரசார பயணத்தை அகில இந்திய பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைப்பதாகவும் இருந்தது. தினசரி 2 மாவட்டங்கள் என்ற அடிப்படையில் அவரது பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஆனால் கரூர் துயர சம்பவத்தால் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் நிகழ்ச்சிகளை தள்ளி வைத்துள்ளது. பா.ஜ.க.விலும் உண்மை கண்டறியும் குழுவை ஜே.பி. நட்டா நியமித்தார். அந்த குழுவினர் கரூர் சென்று சம்பவம் நடந்த இடங்களை பார்வையிட்டு விசாரித்தனர். இந்த குழுவினர் அடுத்த ஒரு வாரத்துக்குள் தங்கள் அறிக்கையை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பிரசார பயணத்தை தள்ளி வைக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. இதனால் ஜே.பி.நட்டாவின் வருகையும் ரத்தாகி உள்ளது. இனி தீபாவளி பண்டிகைக்கு பிறகு பிரசார பயணம் தொடங்கும் என்றும் அப்போது ஜே.பி.நட்டா திட்டமிட்டவாறு பிரசாரத்தை தொடங்கி வைப்பார் என்றும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.