மேட்டூர்: சேலம் மாவட்டம் மேச்சேரியில் அ.தி.மு.க. தொண்டர் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் மேச்சேரி மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வம், பேரூர் செயலாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-
சமீபத்தில் சேலம் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் செலவில் தி.மு.க. இளைஞரணி கூட்டம் நடந்தது. இறுதியாக உதயநிதி பேசுகையில், கூட்டத்திடலின் கடைசியில் சீட்டு காலியாக இருந்தது, மக்கள் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இதுதான் திமுக கட்சி.
மருத்துவமனையில் படுத்துக்கொண்டு களத்தில் இறங்கி வாக்கு கேட்காமல் வெற்றி பெற்ற ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். சாதாரண கட்சியில் இல்லாமல் இவ்வளவு பெரிய கட்சியில் இருப்பதில் பெருமை கொள்கிறோம்.
அ.தி.மு.க.,வில் கிளை செயலாளர்கள் தான் கட்சியின் முதுகெலும்பு. சாதாரண கிளை செயலாளர் என்று சொல்லாதீர்கள். இல்லாத கட்சியில் மாவட்டச் செயலாளராக இருப்பதை விட, அ.தி.மு.க., கட்சியில் கிளைச் செயலாளராக இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும்.
மழை எப்போது வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. சூரியன் ஒளியாக இருக்கும். ஆனால் திடீரென்று மேகம் வந்து அதை மறைக்கிறது. அதேபோல் 2026-ல் தி.மு.க.வை தோற்கடித்து அதிமுக ஆட்சி அமைக்கும். நடிகர்கள் கட்சி தொடங்கலாம், ஆனால் எம்ஜிஆர் ரசிகர் மன்றம் தொடங்கி கட்சியை உருவாக்கி அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஆட்சி மாற்றத்திற்கான 2026 தேர்தல்.
ஓரிரு மாதங்களுக்கு முன்பே ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம் போடப்படும். ஆந்திரா, தெலுங்கானாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது போல் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். திமுக 5 ஆண்டுகள் கூட ஆட்சி செய்ய வாய்ப்பில்லை. எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமியால் இயக்கக்கூடிய அதிமுக கப்பல் 2026-ல் கரையைக் கடந்து ஆட்சி அமைக்கும்’’ என்றார்.