சென்னை: அரசு விழாக்களில் பங்கேற்கும் போது தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் முறையான உடைகளை அணிய உத்தரவிடக் கோரி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை சேலையூரை சேர்ந்த வழக்கறிஞர் எம்.சத்யகுமார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க.வை சேர்ந்த எனது தாத்தா சுந்தர்ராம ரெட்டியார், முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். விவசாயிகள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.
1967-ல் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, முதல்வர் அண்ணாதுரையும், பின்னர் கருணாநிதி, ஸ்டாலின் போன்ற முதல்வர்களும் தமிழ் மொழியையும், தமிழகத்தின் பெருமையையும், பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் ஆடை அணிந்தனர்.
அதை தொண்டர்களும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், தற்போது தமிழக துணை முதல்வராக உள்ள உதயநிதி ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது கட்சியின் சின்னம் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட சட்டை, ஜீன்ஸ் பேண்ட், தகாத ஷூ அணிந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இது துணை முதல்வர் அரசு விழாக்களில் பங்கேற்கும் போது அணிய வேண்டிய ஆடைக்கு எதிரானது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியில் இருப்பவர்கள் எந்த மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்து 2019-ல் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் முறையான உடை அணிய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.