சென்னை: மோசடி செய்வது தியாகத்தில் வருகிறது… கமிஷன் பெறுவது, லஞ்சம் பெறுவது, வேலைக்கு பணம் வாங்குவது, மோசடி செய்வது எல்லாம் தியாகத்தில் வருகிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் தி.மு.க., தொடர்ந்த வழக்கில் தான் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றார். அவர் என்ன தியாகம் செய்தால் சிறைச் சென்றார்? சிறைக்கு அனுப்பியதே நீங்கள் தான். இப்போது வருக வருக என வரவேற்கிறீர்கள்.
உங்கள் கட்சியில் இருந்தால் அது தியாகம். அடுத்த கட்சியில் இருந்தால் ஊழலா? தமிழகத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்கிறது. நாட்டிற்காக தியாகம் செய்துவிட்டு சிறைக்கு சென்றவர்களை எல்லாம் எந்த பட்டியலில் சேர்ப்பது? செந்தில் பாலாஜி என்ன தியாகியா? லட்டில் மாட்டு கொழுப்பை கலந்தது தவறுதான்.
ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு கோவிலை சுத்தம் செய்வது எந்த வகையிலும் சரி ஆகாது. லட்டுக்கெல்லாம் கோவிலின் புனிதம் கெட்டுப் போகிறது என்று கூறுவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
சனாதன தர்மம் என்றால் என்ன? லட்டில் தான் சனாதனம் உள்ளது என்பதை எப்படி ஏற்க முடியும். இதனால் தான் எங்களுக்கு சிரிப்பு வருகிறது. நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டதில் எனக்கு வருத்தம் உள்ளது. ஆனால் அவரது படம் அங்கு வெளியாக உள்ள நிலையில் மன்னிப்பு கேட்டு தான் ஆக வேண்டும்.இவ்வாறு சீமான் கூறினார்.