சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக, வரும் 27ம் தேதி அமெரிக்கா செல்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழக முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடந்த 3 ஆண்டுகளில் துபாய், அபுதாபி, லண்டன், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குச் சென்று, முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் இந்த முதலீட்டாளர்கள் ஈர்ப்பு பயண வரிசையில் அடுத்ததாக அமெரிக்கா செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் 27 ஆம் தேதி அமெரிக்கா சென்று அங்கே தங்கியிருந்து முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளார். இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. மத்திய வெளியுறவு அமைச்சகம் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது.
தொடர்ந்து முதல்-அமைச்சரின் பயணத் திட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த பயணத்தின் போது சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ நகரங்களில் உலகின் முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.