கோவை மாநகராட்சி கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடந்தது. வழக்கம் போல் மாநகராட்சியை கண்டித்து கூட்டம் தொடங்கியவுடன் அதிமுக கவுன்சிலர்கள் 3 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளில்லா விமானங்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தி சொத்து வரி வசூலிக்க தடை விதிக்க வேண்டும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர். அவர்களைத் தொடர்ந்து, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிஎம்டிகே உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களும் கவுன்சிலர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து இதே கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து கோவை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் காங்கிரஸ் கட்சியின் அழகு ஜெயபாலன் பேசுகையில், ”100 சதவீத சொத்து வரி உயர்வு, ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீத சொத்து வரி உயர்வை தீர்மான மேடையில் கடுமையாக எதிர்த்தோம். இருந்த போதிலும் அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், இதையெல்லாம் நடைமுறைப்படுத்தினால், மக்கள் மிகுந்த சிரமங்களை சந்திக்க நேரிடும்; அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும். அதேபோல, ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி கட்டிடங்களை ஆய்வு செய்து அவர்கள் விரும்பியபடி வரிகளை நிர்ணயம் செய்தனர். தாமதமாக வரி செலுத்தினால், 1 சதவீதம் அபராதம் விதித்தனர்.
இதையெல்லாம் ஏற்க முடியாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டோம். கடந்த 20-ம் தேதி ஆய்வுக்கு வந்த அமைச்சர் நேரு, ட்ரோன் சர்வே மற்றும் அபராதம் விதிப்பதை ரத்து செய்வதாக அறிவித்தார். ஆனால், 100 சதவீத வரி உயர்வை 50 சதவீதமாக குறைக்க வேண்டும், ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அப்படியே உள்ளன. இவை நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும். இது தொடர்பாக கூட்டணி கட்சிகளிடமும் பேசி வருகிறோம். தொடர்ந்து போராட்டம் நடத்தினால் மட்டுமே எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் பட்சத்தில் அதை கையில் எடுக்க தயங்க மாட்டோம் என்றார்.
இதுகுறித்து மேயர் ரங்கநாயகியிடம் பேசினோம். “நாங்கள் ட்ரோன் கணக்கெடுப்பை நிறுத்திவிட்டோம். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சொத்துவரி உரிய காலத்தில் உயர்த்தப்படாததால், தற்போது ஒரேயடியாக 100 சதவீதம் வரியை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு 6 சதவீத வரி உயர்வு என்பது சிறிய தொகை. இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் என்னிடமோ, பொறுப்பு அமைச்சரிடமோ பேசியிருக்கலாம். அல்லது தங்கள் கட்சித் தலைவர்கள் மூலம் முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கலாம்.
மாறாக, கூட்டணியில் இருந்த அவர்கள், மாநகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி வளாகத்தில் போராட்டம் நடத்தியது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளோம்,” என்றார். மூன்றாண்டுகள் மவுனம் காத்து தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் போராட்டம் நடத்துவது ஏன் என்ற கேள்வியை எழுப்பும் சிலர், “பொங்கலின் போது ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், நிர்வாகிகள் அமைச்சரிடம் இருந்து ‘பொங்கல் பரிசு’ பெற்றனர். இது பிறருக்கு தாமதமாகத்தான் தெரியவந்தது. கூட்டணி கட்சியினர் திடீரென போர்க்குரல் எழுப்புவதற்கு இந்த ‘பரிசு’ விவகாரமும் முக்கிய காரணம்” என்றார்.