சென்னை: பெண்கள் மீதான வன்முறையை கட்டுப்படுத்த பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை போலீசார் விரைந்து கைது செய்துள்ளனர். எனினும் தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. கடந்த 2024-ம் ஆண்டில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 3,407-ல் இருந்து 5,319-ஆகவும், பாலியல் வன்கொடுமை வழக்குகள் 406-ல் இருந்து 471-ஆகவும் அதிகரித்துள்ளது. இது பெண்களின் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது. இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் மதுபோதையில் இருப்பவர்களாலேயே நிகழ்கின்றன.
கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்தன. இனியும் தாமதிக்காமல், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.