சென்னை: சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- 2014-ல் மத்தியில் பா.ஜ.க., ஆட்சிக்கு வந்த பின், தொடர்ந்து, 410 ரூபாயாக இருந்த வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை, தற்போது, 820 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இன்று, அன்றாட அத்தியாவசிய காஸ் சிலிண்டரின் விலையை, 50 ரூபாய் உயர்த்தி, சாமானிய மக்களை, மத்திய பா.ஜ.க., அரசு கடுமையாக பாதித்துள்ளது. மேலும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்கள் படும் துன்பத்தை கண்டுகொள்வதில்லை.
நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ள மத்திய பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.