மகாராஷ்டிரா: கேரளாவை மினி பாகிஸ்தான் என்று மகாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.
இதைத் தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இவரைத் தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
மகாயுதி கூட்டணி அமைச்சரவையில் பாஜகவை சேர்ந்த நிதேஷ் ரானே மீன்வளத்துறை அமைச்சராக பதவியேற்று கொண்டார். இந்நிலையில், கேரளாவை மினி பாகிஸ்தான் என்று மகாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நிதேஷ் ரானே, “கேரளாவில் இந்துக்களின் மக்கள்தொகை குறைந்துகொண்டே வருகிறது. இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இந்து பெண்கள் லவ் ஜிகாத் டார்கெட் செய்யப்படுகின்றனர். பாகிஸ்தானில் இந்துக்கள் நடத்தப்படுவதை போல தான் கேரளாவிலும் நடத்தப்படுகின்றனர்.
பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து ஆதரவு கிடைப்பதால் தான் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
கேரளா என்பது ஒரு மினி பாகிஸ்தான். அதனால் தான் ராகுல் காந்தியும் அவரது தங்கையும் அங்கு போட்டியிட்டு வெற்றி பெறுகின்றனர். பயங்கரவாதிகள் அனைவரும் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.