கோவை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கோவைக்கு வருகை புரிகிறார். ஹாக்கி மைதானம் உட்பட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை கோவை வருகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக நாளை காலை 11 மணிக்கு கோவைக்கு வருகை தருகிறார்.
கோவை விமான நிலையத்தில் அவருக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் அ.ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் தலைமையில் பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
அதனை தொடர்ந்து அவர் கார் மூலமாக வடகோவையில் உள்ள தமிழ்நாடு வனக்கல்லூரிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் வனப்படை நவீனமயமாக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் அவர், வனக்காவலர்களுக்கு ஆயுதங்கள் வழங்குகிறார்.
பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறுமுகை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டையில் ரூ.19.50 கோடி மதிப்பில் 20 ஹெக்டேர் பரப்பளவில் அதிநவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள வன உயிரின மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தையும் திறந்து வைக்க உள்ளார்.
ரூ.9.67 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி தளத்துடன் அமைய உள்ள ஆக்கி மைதானத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அத்துடன் கோவை மாவட்டத்தில் ரூ.38.08 கோடி மதிப்பில் 69 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, ரூ.61.15 கோடி மதிப்பில் 140 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு நடைபெறும் விழாவில் பங்கேற்று 40 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் பலர் கலந்து கொள்ள உள்ளனர். கோவையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொள்ளும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை புறப்பட்டு செல்கிறார்.
துணை முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.