ஐதராபாத்: கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை முன்னதாகவே அல்லு அர்ஜுன் சந்தித்திருக்க வேண்டும். அப்படி சந்தித்திருந்தால் டென்சன் எளிதாகியிருக்கும் என்று துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
“புஷ்பா 2” படத்தின் சிறப்பு காட்சியை அல்லு அர்ஜுன் தியேட்டரில் சென்று பார்க்கும்போது கூட்டல் நெரிசல் ஏற்பட்டு 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அபாய கட்டத்தை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை யாரும் சென்று பார்க்கவில்லை. ஆனால் தெலுங்கானா திரையுலகம் அல்லு அர்ஜுன் பக்கம் நிற்கிறது என தெலுங்கான மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில்தான் அல்லு அர்ஜூன் விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில துணை முதல்வராக பவன் கல்யாணிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பவன் கல்யாண் பதில் கூறியதாவது:-
சட்டம் அனைவருக்கும் சமமானது. இதுபோன்ற சம்பவங்களில் போலீசார் பொதுமக்களின் பாதுகாப்பை மனதில் வைத்து செயல்படுகிறார்கள். எனினும், தியேட்டர் ஊழியர்கள் அங்கிருந்த சூழ்நிலை குறித்து முன்னதாகவே அல்லு அர்ஜுனிடம் தெரிவித்திருக்க வேண்டும். அவர் இருக்கையில் அமர்ந்ததும், நெரிசலை கட்டுப்படுத்துவது கடினமாகிவிட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை முன்னதாகவே அல்லு அர்ஜுன் சந்தித்திருக்க வேண்டும். அப்படி சந்தித்திருந்தால் டென்சன் எளிதாகியிருக்கும்.
ரேவந்த் ரெட்டி தலைசிறந்த வீரர். அவர் YSRC போல் செய்யவில்லை. அவர் சிறப்பு காட்சிகளை அனுமதித்ததுடன், டிக்கெட் விலையையும் ஏற்றினார். இருப்பினும் இந்த விஷயத்தில், அல்லு அர்ஜுன் விசயத்தில் திரைக்கு முன்னோ அல்லது பின்னோ என்ன நடந்தது என்பது எனக்கு முழுமையாகத் தெரியாது.
ஒரு முதல்வராக என்னுடைய பொறுப்பு சட்டத்தை நிலை நாட்டுவதுதான். எனக்கு எந்த தனிப்பட்ட விருப்பங்களும் இல்லை. எனது சகோதரர் சிரஞ்சீவி படம் பார்க்க செல்லும்போது இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்கு மாஸ்க் அணிந்து செல்வார். இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.