திருச்சி: ஒருமித்த கருத்து விரைவில் வரும்… காவிரி பிரச்னை குறித்து இரு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும் நாள் விரைவில் வரும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார்.
மதசார்ப்பற்ற தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
காவிரி பிரச்னை குறித்து தமிழ்நாட்டில் உள்ள ஆட்சியாளர்களுக்கு முழுமையான விவரங்கள் தெரியும். பெங்களூருவில் மட்டும் 1.40 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் சீரான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இதில் ஒளிவுமறைவு இல்லை. தமிழ்நாட்டில் ஆளும் கட்சிகளுக்கும் இது தெரியும்.
கர்நாடகாவில் உள்ள பெங்களூரு உள்ளிட்ட 9 மாவட்ட மக்கள் குடிநீருக்காக கஷ்டப்பட்டு வருகின்றனர். காவிரி பிரச்னை குறித்து 2 மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும். அந்த நாள் விரைவில் வரும். அன்று இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இதற்கு மேல் நான் கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.