கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அங்கு சாலைப் பேரணி போதும் என தவெகவினர் அனுமதி கோரியுள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே கடலூரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெறவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று கன்னியாகுமரியில் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அங்கு சாலைப் பேரணி போதும் என தவெகவினர் அனுமதி கோரியுள்ளனர்.
பொதுக் கூட்டத்திற்கு மாற்றாக விஜய் கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் இருந்து கன்னியாகுமரி சீரோ பாயிண்ட் வரை பைபாஸ் ரோட்டில் ரோடுஷோ செல்கிறார். அப்போது அவர் உரையாற்றவும் உள்ளார். இதற்காக அனுமதி கோரி தவெக நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினிடம் மனு அளித்தனர். அதற்கு அவர் அனுமதி அளித்தார்.
இதற்காக இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரிக்கு வருகிறார். கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர் தொகுதி தவெக வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரிக்கிறார்.