சென்னை: திமுக அரசின் மீது மக்கள் மட்டுமின்றி அமைச்சர்களும் அதிருப்தியில் உள்ளனர் என்று தமிழக பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இதுகுறித்து, தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத்துக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பகிரங்கமாகத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ‘டைடல் பார்க்’ எனப்படும் தொழில்நுட்பப் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இல்லாமல், தொழில் துறையின் கீழ் இருப்பது அசாதாரண சூழ்நிலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், தகவல் தொழில்நுட்பத்துடன் எந்த துறையும் இணைந்தால், அந்த துறை மேம்படும், அது நடக்காது என்பதை புரிந்து கொள்ளலாம்.

மேலும், அவர் ஒருவித மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிகிறது. நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டது ஏன்? அவர் என்ன தவறு செய்தார்? அவருக்கு பெயரளவிலான அமைச்சு வழங்கப்பட்டு, உரிய அதிகாரமோ, தேவையான நிதியோ வழங்கப்படாவிட்டால், அது அந்த அமைச்சருக்குக் கிடைத்த தண்டனையல்லவா? தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்கி மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லாதது குறித்து பழனிவேல் தியாகராஜன் தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். இதனால் இந்த திமுக ஆட்சி மீது மக்கள் மட்டுமின்றி அமைச்சர்களும் அதிருப்தியில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.