தஞ்சாவூர்: மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை எனபது மாநிலத்தின் உரிமைகளின் மீதும், மக்களின் நலன்களின் மீதும் நேரடியாய் தொடுக்கப்படும் தாக்குதலாகும் என்று திமுக மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
.
தமிழ்நாட்டின் நலனுக்காக மட்டுமின்றி தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் அனைத்து மாநிலங்களுக்காகவும் முன்னணியில் நின்று முதல்வர் ஸ்டாலின் போராடி வருகிறார். கடந்த மார்ச் 5ம் தேதி மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை சதிக்கு எதிராக சென்னையில் கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் அழைக்கப்பட்ட 63 கட்சிகளில் 58 அரசியல் கட்சிகள் கலந்து கொண்டு முதலவர் ஸ்டாலின் முடிவை ஆதரித்து ஒரே குரலில் மத்திய பாஜக அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.
நியாயமான தொகுதி மறுவரையறை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மற்ற மாநிலங்களை அணுகி, நியாயமான தொகுதி மறுவரையறை மேற்கொள்வதை உறுதி செய்ய ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவை (JAC) உருவாக்குவதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி கடந்த 22ம் தேதி முதல்வர் தலைமையில் சென்னையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மூன்று மாநில முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர், தலைவர்கள் என தொகுதி வரையறையால் பாதிக்கப்படும் தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட 6 மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் விதமாக 1971-ஆம் மக்கள் தொகையின் அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையே தொடரும் என அறிவிக்கப்பட்டது. இன்றுவரை அந்த எண்ணிக்கையே தொடர்கிறது.
கடந்த 1971-ம் ஆண்டு கணக்கின்படி தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஒவ்வொரு பத்தாண்டுக்கான மக்கள் தொகை வளர்ச்சி என்பது 23.41% ஆகவும், வட மாநிலங்களில் 24.39% ஆகவும் இருந்து, அதாவது இரு பகுதிகளிலும் மக்கள்தொகை வளர்ச்சியானது சமநிலையில் இருந்தன. மக்கட்தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தின. அதன் விளைவாக தற்போது வட மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பாதிக்கப்படவுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இடையில் மக்கள் தொகை வளர்ச்சியில் பெரும் வேறுபாடு உள்ளது.
தற்போதைய கணக்கின்படி பார்த்தால், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மக்கட்தொகையின் பத்தாண்டு வளர்ச்சி விகிதத்தை 12.51% ஆகக் குறைத்தன, அதேசமயம் வட மாநிலங்கள் 21.83% என்ற உயர் வளர்ச்சி விகிதத்திலேயே உள்ளன. மக்கட்தொகை வித்தியாசம் மட்டுமில்லை. பொருளாதாரத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மக்கள் தொகையைச் சிறப்பாக குறைத்துள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இந்திய பொருளாதாரத்தில் கணிசமாக பங்களிக்கின்றன. அவற்றின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) பங்கு 36% ஆகும்,
ஆனால் மத்திய அரசிடமிருந்து திரும்பக் கிடைக்கும் வரிப் பகிர்வு வெறும் 27% மட்டுமே. பீஹார், உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் GSDP-யில் 20% மட்டுமே பங்களிக்கின்றன, ஆனால் அவை 42.5% என்ற பெரும்பங்கை வரி பகிர்வாக பெற்று வருகின்றன. இது நியாயமற்ற பகிர்வு முறை, ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் தமிழ்நாடு ரூ 29, கர்நாடகா ரூ 14 என மிக குறைந்தளவே பெறுகின்றன, மாறாக, நான்கு வட மாநிலங்கள் தாங்கள் செலுத்தும் ஒவ்வொரு ரூ 100-க்கும் சாரசரியாக ரூ.425 பெறுகின்றன. பீகார் மட்டுமே ரூ.922 ரூபாய் பெறுகிறது.
மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட ஏழு மாநிலங்களுக்கு அது அநீதியாக அமையும். எம்.பிக்களின் எண்ணிக்கை குறையும், அதனால் அரசியல் பிரதிநிதித்துவமும் குறையும்.
கடந்த வாரத்தில், இப்பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவும், அதை பற்றி பேசவுமே நமது நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுமதிக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம், தமிழ்நாடு உட்பட தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படவிருக்கும் மாநிலங்களை ஒருங்கிணைத்து உறுதியாக எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது
.
இப்போது சேர்ந்து குரல் கொடுக்க வேண்டிய நேரமிது. வரப் போகும் தொகுதி மறுவரையறை ஒரு பெரும் சவாலை முன்வைக்கிறது, பொது விவாதம் வலுவாக இருந்தால்தான் இந்த பேராபத்தில் இருந்து தற்காத்து கொள்ளும் போராட்டமும் வலுவடையும். தமிழ்நாட்டோடு பிற பாதிக்கப்படும் மாநிலங்களும் ஒன்றிணைந்துள்ளன, இப்போது அனைத்து ஜனநாயக சக்திகளும் நியாயமான பிரதிநிதித்துவத்திற்கான இந்த போராட்டத்தில் எங்களுடன் நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மத்திய அரசு நியாயமான மற்றும் நமது உரிமைகளை பாதிக்காத தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும் இல்லை என்றால் தொகுதி மறுவரையறையே அடுத்த 25 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும் அதுவரை இந்த போராட்டத்தில் தமிழ்நாட்டு மக்கள அனைவரும் ஒருங்கிணைந்து நிற்க வேண்டும் அப்போது தான் நமது உரிமைகளை பாதுகாக்க முடியும்.
இதேபோல் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை வழங்கப்படவில்லை. கல்வி நிதியும் வழங்கப்படாமல் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது. எனவே நமது உரிமைகளை பெற முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து போராட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.