புதுடில்லி: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இத்திட்டம் அமலுக்கு வரும் என்றும், இதன்மூலம் 23 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இத்திட்டப்படி, 25 ஆண்டுகள் பணி முடித்திருந்தால், ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெற்றுக்கொள்ளலாம். ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் குடும்பத்தினருக்கு ஓய்வூதியத்தில் 60 சதவீதம் கிடைக்கும். குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கும் பலன் கிடைக்கும் வகையில், குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் பணி முடித்திருந்தாலும் 10 ஆயிரம் ரூபாய் மாத ஓய்வூதியம் கிடைக்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.