சென்னை: வரும் 21ம் தேதி 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியல் களத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி புதிய வேகத்துடன் தயாராகி வருகிறது. திருச்சியில் நடைபெற உள்ள கட்சி மாநாட்டில், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
எந்த கூட்டணியும் இல்லாமல், தனித்து போட்டியிடும் முடிவில் கட்சி உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். கடந்த தேர்தல்களில் கிடைத்த வாக்கு சதவீதம் மற்றும் மக்களிடையே உருவாகிய ஆதரவு தான் இந்த முடிவுக்கு காரணம் என சீமான் விளக்கினார். தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன், முழு தொகுதிகளிலும் களமிறங்குவது அவசியம் என்று கட்சித் தலைமை கருதுகிறது.
இந்த அறிவிப்பு கட்சித் தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வேட்பாளர் பட்டியலில் ஆண், பெண் சமவிகிதம் கடைப்பிடிக்கப்படும் என்றும், சமூக நீதி அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் முழு வேட்பாளர் விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.