மதுரை: மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று அளித்த பேட்டி:- ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறையால் மத்திய அரசு அல்லது மாநில அரசுகளின் பதவிக்காலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதிமுகவை அழிக்க மத்திய அரசு விரும்பவில்லை. அ.தி.மு.க.வை அழிக்க விரும்பவில்லை என்றால் தேஜ கூட்டணியை அமைக்க வேண்டும். ஒருங்கிணைந்த அ.தி.மு.க.,வாக செயல்பட வேண்டும் என்பதே, பா.ஜ.,வின் எண்ணம்.
தமிழகத்தில் அதிமுக வலுவாக இருக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவரது நடவடிக்கையால் 2026-க்கு பிறகு அதிமுக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2026-ல் வெற்றி பெறுவோம் என எடப்பாடி கூறியிருப்பது மூடநம்பிக்கையுடன் பேசுவது போல் தெரிகிறது. அவரது நடவடிக்கைகள் மற்ற கட்சிகளுக்கு சாதகமாக அமையும்.
எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் பயம் ஏற்பட்டுள்ளது. கொடநாடு கொலைவழக்கு, அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க நினைத்து எடப்பாடி செயல்படுகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த வெற்றி தற்காலிக வெற்றி.
அதிமுகவில் எனது ஸ்லீப்பர் செல்கள் மிக வேகமாக செயல்படுகின்றன. எடப்பாடியின் நடவடிக்கைக்கு முன்னாள் அமைச்சர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். தேர்தலில் பாஜகவுடன் இணைந்தால்தான் அதிமுக வெற்றிபெற முடியும். பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்தால் அதை ஏற்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.