சென்னை : தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி இன்றைக்கு ஒரு மிகக் குறிப்பிடத்தக்க சிறப்பான ஒரு உச்சத்தைத் தொட்டிருக்கிறது மச்சான் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (17.12.2025) சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “வரக்கூடிய 2030-ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க பொருளாதாரத்தை நாம் எட்டுவோம் என்கின்ற மாபெரும் இலக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய நமது முன்னெடுப்புகளால், தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி இன்றைக்கு ஒரு மிகக் குறிப்பிடத்தக்க சிறப்பான ஒரு உச்சத்தைத் தொட்டிருக்கிறது. மாநில ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு GSTP 2023-2024-ஆம் ஆண்டுகளில் 26.88 இலட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டினுடைய பொருளாதாரம், கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 31.19 இலட்சம் கோடிகளாக உயர்ந்து 16 சதவிகித வளர்ச்சியை நாம் இன்றைக்கு தொட்டிருக்கிறோம்.
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் தரவுகளின் வாயிலாக கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய வளர்ச்சி விகிதம் முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசின் நிதி நிர்வாக மேம்பாட்டு குழு, தமிழ்நாடு அரசின் சிறப்பான கொள்கைகளுக்கும், எடுத்திருக்கக்கூடிய மாபெரும் வெற்றியாக நாம் இதைச் சொல்லலாம். இத்தகைய உயர் வளர்ச்சி விகிதம் என்பது கடந்த மூன்று ஆண்டுகளாகவே தொடர்ந்து இருக்கிறது. 2021-22-ஆம் ஆண்டுகளில் நாம் குறிப்பிட்ட காலத்தில் 15.91 சதவிகிதமாகவும், 2022-23-ஆம் ஆண்டுகளில் 14.47 சதவீதமாகவும், 2023-24-ஆம் ஆண்டுகளில் 13.34 சதவீதமாக தொடர்ச்சியாக, முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு இந்த வளர்ச்சி விகிதம் ஏற்பட்டு இன்றைக்கு அது 16 சதவீதத்தை தொட்டிருப்பது மிகப்பெரிய ஒரு வளர்ச்சியும், திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக விளங்கியிருக்கிறது.
குறிப்பாக, இந்த வளர்ச்சியில் உற்பத்தித்துறை மிகப்பெரிய பங்களிப்பினை செய்திருக்கிறது. இந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்நாட்டின் இந்த பொருளாதாரம் GSTP-யின் வளர்ச்சி என்பது இந்த உற்பத்தித் துறையின் பொறுத்தமட்டில், 1.46 இலட்சம் கோடியாக இருந்தது, இரண்டு மடங்காக இன்றைக்கு பெருகி இருக்கிறது.
சேவைத் துறையை (Service Sector) எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியில் தலா 53% தன்னுடைய பங்களிப்பை செலுத்தி, real growth என்கின்ற வகையில் 2024-25-ஆம் ஆண்டுகளில் நம்முடைய சேவைத் துறை 11.3 சதவீத அளவிற்கு தன்னுடைய பங்களிப்பை தந்திருக்கிறது. குறிப்பாக, ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை நாம் நாம் எட்டவேண்டும் என்று சொன்னால், ஏற்றுமதியில் மிகப் பெரிய முன்னேற்றத்தை நாம் காண வேண்டும்.
முதலமைச்சரின் தொடர் முன்னெடுப்புகளால் பல்வேறு உலக நாடுகளில் அவர் பயணம் செய்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு, அதன் வாயிலாக முதலீட்டாளர்களின் சந்திப்பின் மூலமாக, 11 இலட்சத்து 40 ஆயிரத்து 731 கோடி முதலீடுகள் பெறப்பட்டு, 1016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 34 இலட்சத்து 8 ஆயிரத்து 522 இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் நாம் வேலை வாய்ப்புகளை கொண்டு வந்திருக்கிறோம்.
ஏற்றுமதியை பொறுத்தவரையில், நாம் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை பெறுவதற்கு அடிப்படையாக அமைந்திருக்கின்ற தமிழ்நாட்டின் ஏற்றுமதியின் சாதனை ஒன்றிய அரசின் தரவுகளின்படி 2021-22-ஆம் நிதியாண்டில், 1.86 பில்லியன் டாலராக இருந்தது. 2022-23-ஆம் நிதியாண்டில் 5.37 பில்லியன் டாலராகவும், 2023-24-ஆம் நிதியாண்டில் 9.56 பில்லியன் டாலராகவும், 2024-25-ஆம் நிதியாண்டில் 14.65 பில்லியன் டாலராக மின்னணு பொருள்களின் ஏற்றுமதி மூன்று ஆண்டுகளில், ஏறத்தாழ ஏழு மடங்கு அதிகரித்திருக்கிறது. ஏறத்தாழ 700 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என்பதை நம்முடைய அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த மின்னணு பொருள்களின் ஏற்றுமதியில் நம்முடைய தமிழ்நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்றிருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்திருக்கக்கூடிய ஒரு மாபெரும் நற்சான்று இந்த 16 சதவிகிதம் வளர்ச்சி என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இவர் அவர் தெரிவித்தார்.