சென்னை: அமித்ஷா கூறியதுபோல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஒருபேட்டியில் தமிழகத்தில் கூட்டணி அரசு அமைக்கப்படுமா..? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும், அதில் பா.ஜனதா கட்சியின் பங்கு இருக்கும். தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதல்வர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார்” என்று அமித்ஷா கூறி இருந்தார்.
முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பெயரை கூறாமல், அதிமுக தலைமையின் கீழ் தாங்கள் போட்டியிடுவதால், அக்கட்சியை சேர்ந்தவர்களே முதல்வர் ஆவார்கள் என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது அது விவாதப் பொருளாக மாறி உள்ளது.
இந்நிலையில் அமித்ஷா கூறியதுபோல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதுதொடர்பாகசெய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நயினார் நாகேந்திரன், “தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள். 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். எங்கள் கூட்டணியை எந்தக் காலத்திலும் அவர்கள் பிளவுப்படுத்த முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.