சென்னை : காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்ட சம்பவத்திற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையம் மீது மர்மநபர் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
“இதை விட மோசமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட முடியாது” என்று ஒவ்வொரு முறையும் நினைப்பதற்குள் அதனினும் மோசமான ஒரு நிகழ்வு இந்த திமுக ஆட்சியில் ஏற்படுகிறது. சட்டம், ஒழுங்கை சீர்குலைத்துள்ளதற்கு மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
மக்கள் பாதுகாப்பு வேண்டி செல்லும் காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலையிருக்கிறது. சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கைக் காக்க தவறியதால், தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.