சென்னை நங்கநல்லூரில் பாஜக மண்டல அலுவலகத்தை எல்.முருகன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் சிஆர்பிஎப், சிஐஎஸ்எஃப், ரயில்வே, வங்கி, யுபிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து தேர்வுகளையும் தமிழில் எழுத பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. ஐநா சபையில் முதன்முறையாக தமிழ் குரல் ஒலித்தது என்றால் அதற்கு பிரதமர் மோடிதான் காரணம்.
திருக்குறள் கிட்டத்தட்ட 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் பண்பாட்டு மையங்கள், காசி தமிழ்ச் சங்கம், இந்து பனாரஸ் பல்கலைக் கழகத்தில் பாரதியார் இருக்கை என தமிழுக்குப் பெருமை சேர்த்தது பாஜக அரசுதான். காங்கிரசும் திமுகவும் ஆட்சியில் இருந்தபோது தமிழ் மொழிக்கு என்ன செய்தது? ஆனால், பிரதமர் மோடி உலகிலேயே மூத்த மொழி தமிழ் என்று உலகுக்கு சொல்லி வருகிறார்.

ஜல்லிக்கட்டு நடைபெறாமல் தடுத்தது காங்கிரஸ் மற்றும் திமுக தான். ஆனால் பிரதமர் மோடி ஜல்லிக்கட்டை மீட்டார். மேகதாது அணை தொடர்பாக மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து சுமூகமான முடிவை எடுக்கும். மீனவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் ரூ. 400 கோடி ஒதுக்கப்பட்டது.
மேலும், பாஜக ஆட்சியில் மீனவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மீனவர்கள் எல்லை தாண்டும் போது இலங்கை அரசால் கைது செய்யப்பட்டால், அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் உடனடியாக அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாக உள்ளது. யாருக்கும் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தமிழகத்தில் பெண்கள் தனியாக நடக்க முடியாத நிலை உள்ளது. சட்டம் ஒழுங்கு என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு மோசமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.