ஜம்மு காஷ்மீர்: சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது நாட்டிற்கு வரலாறு கிடையாது. அது அவர்களுடைய கட்சியின் வரலாறு என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்த சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு 2019-ம் ஆண்டு அகஸ்ட் மாதம் 5-ந்தேதி நீக்கியது.
சட்டப்பிரிவு 370-ஐ நீக்கப்பட்டு 4 வருடங்கள் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது இந்தியாவின் முக்கியமான தருணம் எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறியதாவது:-
சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது நாட்டிற்கு வரலாறு கிடையாது. அது அவர்களுடைய கட்சியின் வரலாறு. நாட்டின் அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அவர்கள் எங்கே இருந்தார்கள்? அவர்கள் இந்து இந்தியாவை விரும்பினார்கள். ஆனால் நேரு, பட்டேல், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் அந்த நேரத்தில் அதற்கு முடியாது எனத் தெரிவித்தார்கள்.
பாகிஸ்தான் முஸ்லிம் நாடானது. நாம் அவ்வாறு இல்லை. நாம் பல மதங்கள் கொண்ட நாடு. பன்மொழி நாடு, அப்படியே இருப்போம். சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த பின்னர் மிகப்பெரிய மாற்றம் அடைந்துள்ளது. மக்கள் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இங்கு ஒரு இடம், கிராமம் கூட தெரியாத அதிகாரிகள் பணிபுரிகின்றனர். இதுதான் மாற்றம். இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.