தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மீன் மார்க்கெட் பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம், மாற்றுக் கட்சியினர் இணையும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு கும்பகோணம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். திருவிடைமருதூர் தொகுதி பொருளாளர் மருள் நீக்கி, தொழிற்சங்க செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக செந்தில் பாபு வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இளைஞர்கள் மாணவர்கள் இடையே சினிமா மோகம் அதிகமாக இருக்கிறது. 7 கோடி மக்களை ஆளுகிற ஒரு முதல்அமைச்சர் பதவிக்கு வருகிறவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்ன சமூகப் போராட்ட அனுபவம் இருக்கிறது? என்று பார்க்க வேண்டியது அவசியமானது.
நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஜனநாயக நாட்டில் அதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், வெறும் சினிமா பாடல்களையும், வசனங்களையும் வைத்துக்கொண்டு நாட்டை ஆள முடியாது. மக்களோடு மக்களாக இருந்து, களப்பணியாற்றி, குறைந்தபட்சம் 5 முதல் 10 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் சார்ந்த முடிவுகளை அந்த கட்சிதான் எடுக்க முடியும். கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கும்பகோணத்தையும் விருத்தாச்சலத்தையும் புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கவனயீர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இதே கோரிக்கையை மீண்டும் முன் வைப்பேன். என்றார். மாநகர செயலர் பசுபதி பாண்டியன் நன்றி கூறினார்.