குருகிராம்: பணமோசடி வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சஞ்சீவ் அரோரா மற்றும் பலர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள எம்பி சஞ்சீவ் அரோரா வீடு மற்றும் லுதியானாவில் உள்ள சிலரது வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதுகுறித்து ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா தனது எக்ஸ் போஸ்டில், “ஆம் ஆத்மி எம்.பி.யும், தொழிலதிபருமான சஞ்சீவ் அரோரா மீது அமலாக்கத் துறை நடத்திய சோதனை கட்சியை உடைக்கும் முயற்சியாகும்.
ஆனால், ஆம் ஆத்மி கட்சியினர் எதற்கும் அஞ்சுவதில்லை,” என்றார். இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-
“ஆம் ஆத்மியை அழிக்க அரசின் அனைத்து அமைப்புகளையும் பிரதமர் பயன்படுத்தியுள்ளார். கடவுள் ஆம் ஆத்மியுடன் இருக்கிறார். பயப்பட தேவையில்லை. எந்த தவறும் செய்யப்படவில்லை,” என்றார்.