சென்னை : இஸ்லாமியர்களுக்கு எதிரான மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்ட நகலை கிழித்தெறிந்து அரசியல் வாழ்க்கையில் நுழைந்தேன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி மைதானத்தில் தி.மு.க சிறுபான்மையினர் நல உரிமை பிரிவின் சார்பில் இஃப்தார் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”இஸ்லாமிய மக்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட நகலை கிழித்தெறிந்துவிட்டுதான் எனது அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தேன். நான் முதன்முதலில் கைது செய்யப்பட்டது இஸ்லாமிய மக்களுக்காகத் தான் என்பதை பெருமையாக சொல்வேன்.
’மனிதர்கள் எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும், நமக்குள் எந்த பேதமும் இருக்கக்கூடாது, ஏழை, எளிய மக்களுக்கு எந்த நேரத்திலும் உதவ வேண்டும்’ என்று சொன்ன நபிகள் நாயகத்தின் கருத்தை பின்பற்றிதான் நமது திராவிட இயக்கம் தோன்றியது. பேதமில்லா வாழ்க்கையை தமிழர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டதுதான் நமது தி.மு.க.
குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் தடை சட்டம் என சிறுபான்மை மக்களை நெருக்கடிக்கு ஆளாக்கி வரும் மத்திய அரசுக்கு எதிராக, நமது திராவிட மாடல் அரசும், நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர்.
மத்திய அரசின் வக்பு வாரிய திருத்த மசோதாவை ஆரம்பத்தில் இருந்தே நமது முதலமைச்சர் எதிர்த்து வருகிறார். இஸ்லாமிய மக்களின் உரிமைக்காக மட்டுமல்ல, உங்களுடைய கல்வி, சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் நம் கழகம் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.